சென்னை
பெசன்ட் நகர் ஓடை மாநகரில் வசித்து வருபவர்கள் சதீஷ், காயத்ரி தம்பதியினர்.
இவர்களது இளைய மகள் தரணி (13). இவர் நேற்று மாலை வீட்டின்
அருகேயுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார்.
இந்நிலையில், குளிர்பானம் குடித்த
சில மணித்துளிகளில் வாந்தி எடுத்த சிறுமியின் மூக்கில் இருந்து சிவப்பு நிறத்தில்
சளி வந்துள்ளது. பயந்துபோன சிறுமியின் அக்கா உடனடியாக தனது அம்மாவை அழைத்து
வந்துள்ளார்.
இதையடுத்து அம்மா வந்து பார்த்தபோது சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியுள்ளது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் உடலை
மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குளிர்பானத்தை
ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் கையகப்படுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த
ஆத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு
நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் குளிர் பானம் தயாரிக்க பயன்படுத்தப்படும்
மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து விரிவாக
கேட்டறிந்தார். இந்நிலையில் ஆலையை தற்காலிகமாக மூட அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ்
சந்திரபோஸ் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments